முதலைகளுக்கு கொன்ற உடல்களை உணவாக அளித்த ‘Dr Death’ ராஜஸ்தானில் கைது

பலரைக் கொலை செய்து அவர்களின் உடல்களை முதலைக்குத் தீனியாகப் போட்ட தேவேந்தர் சர்மா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொலை, கடத்தல், கொள்ளை உள்ளிட்ட 27 வழக்குகளில் தேடப்பட்ட 67 வயதான தேவேந்தர் சர்மா, ‘டாக்டர் டெத்’ என்ற பெயரில் பாதிரியார் வேடமிட்டு ஆசிரமத்தில் ஒளிந்து வாழ்ந்து வந்தார். அவரை ராஜஸ்தானின் தௌசாவில் டெல்லி காவலர்கள் கைது செய்தனர்.
திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அவர் ஆகஸ்ட் 2023ல் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன்பின் அவர் தலைமறைவாகிவிட்டார்.
ஆயுர்வேத மருத்துவரான அவர், 1998 முதல் 2004 வரை பல மாநிலங்களில் மருத்துவர்கள், இடைத்தரகர்களின் உதவியுடன் 125க்கும் மேற்பட்ட சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
2002க்கும் 2004க்கும் இடைப்பட்ட காலத்தில் வாடகை வண்டி ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள் பலர் கொல்லப்பட்டு, அவர்களின் வாகனங்கள் பிரித்து விற்கப்பட்டன. உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்சில் முதலைகள் நிறைந்த ஹசாரா கால்வாயில் பலியானவர்களின் உடல்கள் வீசப்பட்டன.
டெல்லி, ராஜஸ்தான், ஹரியானாவில் ஏழு வெவ்வேறு வழக்குகளில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குருகிராம் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனையும் விதித்தது குறிப்பிடத்தக்கது.