இலங்கை செய்தி

‘கொலையாளிக்கு துணைபோகாதீர்’ – மட்டக்களப்பில் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, மட்டக்களப்பில் இன்று (27) பாரிய கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பமான இந்தப் போராட்டம், பின்னர் மாவட்ட செயலகம் வரை அமைதியான முறையில் பேரணியாகச் சென்றது.

இதன்போது, போராட்டக்காரர்கள் மாவட்ட செயலகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், பொலிஸாரால் பஸ்கள் குறுக்கே நிறுத்தப்பட்டு, பிரதான வாயில் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தடைகளைத் தாண்டி செயலகத்தின் முன் திரண்ட பொதுமக்கள், எதிர்காலத்தில் இவ்வாறான கொடூரங்கள் நிகழாத வகையில் குற்றவாளிகளுக்கு உச்சக்கட்டத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என முழக்கமிட்டனர்.

இந்தப் போராட்டத்தின் போது ஒரு முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மனிதாபிமானமற்ற இக்கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் முன்னிலையாகக் கூடாது எனப் போராட்டக்காரர்கள் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரச அதிபர், போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அதன் பின்னரே போராட்டம் நிறைவுக்கு வந்தது. இதன்போது ஜனாதிபதி மற்றும் சட்டத்தரணிகள் சங்கங்களுக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன.

கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து யுவதி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றுமொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் வீரியம் மிக்க மருத்துவப் பொருட்களைப் பொலிஸார் நேற்று நள்ளிரவு கைப்பற்றியுள்ளனர்.

சத்திரசிகிச்சைகளின் போது நினைவிழக்கச் செய்யப் பயன்படுத்தப்படும் இந்த மருந்துகள் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட யுவதி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கிழக்கு மாகாண பாரிய குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவிக்கையில், “பாதிக்கப்பட்ட யுவதிக்கு விசேட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம், மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இதுவரை மேற்கொள்ளப்படவில்லை” – என்றார்.

இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!