இந்தியாவில் பள்ளி மதிய உணவில் நாய்க்கழிவு; 78 மாணவர்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

பள்ளி மாணவர்களுக்கான நண்பகல் உணவில் தெருநாயின் கழிவு கலந்துவிட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 78 மாணவர்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம், பலோடா பஸார் மாவட்டத்திலுள்ள லச்சான்பூர் எனும் சிற்றூரில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் நிகழ்ந்தது.
சமைத்த காய்கறிகள்மீது தெருநாய் ஒன்று தனது கழிவை அகற்றியது குறித்து ஆசிரியர்களிடம் சில மாணவர்கள் எச்சரித்தனர். ஆயினும், அதனைக் கண்டுகொள்ளாது நண்பகல் உணவு தயாரிக்கும் சுயஉதவிக் குழு, அது உண்ணப் பாதுகாப்பானது என்று கூறி, அதனை மாணவர்களுக்குப் பரிமாறியது.
இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வரும் முன்னரே கிட்டத்தட்ட 84 மாணவர்கள் அதனை உண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்ததும் மாணவர்களின் பெற்றோரும் உள்ளூர்வாசிகளும் திரண்டு, பள்ளி நிர்வாகக் குழுவை அணுகி, உணவு சமைக்கும் சுயஉதவிக் குழுவை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.அதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 78 மாணவர்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், வட்டாரக் கல்வி அலுவலர் நரேஷ் வர்மா தலைமையிலான அதிகாரிகள் குழு சனிக்கிழமை அப்பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தியது. அப்போது, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகக் குழுவினரின் வாக்குமூலங்களை அக்குழு பதிவுசெய்தது. அதே நேரத்தில், சுயஉதவிக் குழுவின் உறுப்பினர்களில் எவரும் அவ்விசாரணையில் பங்கேற்கவில்லை.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் தவறிழைத்தோர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, கஸ்டோல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்தீப் சாஹு மாநில முதல்வர் விஷ்ணு தியோவிற்குக் கடிதம் எழுதியுள்ளார்.