ஹமாஸ் குழுவினருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டாம்; பிணையாளிகளின் குடும்பத்தினர் கோரிக்கை

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவினருக்கு மரண தண்டனை விதிக்கும் யோசனையைக் கைவிட வேண்டும் என, ஹமாஸ்பிடியில் உள்ள பிணையாளிகளின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இஸ்ரேலின் வலசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவினருக்கு மரண தண்டனை விதிக்கும் யோசனையை பரிந்துரைத்துள்ளனர்.இந்நிலையில் ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவினருக்கு மரண தண்டனை விதிப்பது குறித்த பொது விவாதத்தால் பிணையாளிகளை விடுவிக்கும் முயற்சிகள் ஆபத்தில் முடியலாம் என்று அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவினருக்கு மரண தண்டனை விதித்தால் பணயகைதிகளாகவிருக்கும் , தமது உறவுகளின் உயிருக்கும் ஆபத்து வரலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.அதேவேளை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவும் அவருடைய போர்க்கால அமைச்சரவையும் உரிய பதிலளிக்க வேண்டும் என்று சிலர் கேட்டுக்கொண்டனர்.
பிணையாளிகளை மீட்கும் நடவடிக்கையில் அரசாங்கம் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை என்றும் பிணையாளிகளின் குடும்பத்தினர் சாடினர்.
அக்டோபர் 7ஆம் திகதி தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸ் குழுவைச் சேர்ந்த பலர் இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வலசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவினருக்கு மரண தண்டனை விதிக்கும் யோசனையை முன்வைத்திருந்தனர்.