பொழுதுபோக்கு

உலகளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற “காந்தாரா” – படக்குழு வெளியிட்ட அறிக்கை

காந்தாரா தெய்வ கதாபாத்திரங்களின் மகத்துவத்தை அவமதிக்காதீர்கள் என்று படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

காந்தாரா திரைப்படம் வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், காந்தாரா திரைப்படத்தின் முன்கதையை மையமாக வைத்து, ‘காந்தாரா சாப்டர் – 1’ திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரிஷப் ஷெட்டியே இப்பத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார். இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், காந்தாரா தெய்வ கதாபாத்திரங்களின் மகத்துவத்தை மிமிக்ரி, ஒப்பனை செய்து கெடுக்காதீர் என்று படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து, ஹோம்பேள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

‘உலகளாவிய பார்வையாளர்களுக்கும் சினிமா பிரியர்களுக்கும்… தைவாராதனே(தெய்வ ஆராதனை) என்பது கர்நாடகத்தின் கடலோரப் பகுதியான துளு நாட்டில் தெய்வ நம்பிக்கைக்கும் கலாசார பெருமைக்குமான சிறந்த அடையாளமாக நிலைநிற்கிறது.

எங்களது காந்தாரா மற்றும் காந்தாரா சாப்டர் – 1 ஆகிய திரைப்படங்கள், இந்த வழிபாட்டு முறைகளை அவற்றுக்குரிய மரியாதையுடன் சித்திரித்து தெய்வ மகிமையைக் கொண்டாடும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை.

தைவாராதனேவுக்கு உரிய மாண்புக்கும் அப்பழுக்கற்ற பக்திக்கும் உரிய மரியாதை அளிக்கப்படுவதையும், இதன்மூலம், துளு மண்ணின் முக்கியத்துவமும் பாரம்பரியமும் வெற்றிகரமாக பரப்பப்படுவதையும் உறுதிசெய்ய நாங்கள் அயராது உழைத்திருக்கிறோம்.

இதற்கு நீங்கள் அளித்துள்ள பெரும் வரவேற்புக்கு நாங்கள் நன்றிக்கடன்பட்டுள்ளோம்.

எனினும், படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரங்களைப் போலவே தனி நபர்கள் சிலர், ஆட்சேபணைக்குரிய விதத்தில் அந்தக் கதாபாத்திரங்களைச் சித்திரித்து நடித்து, பொதுவெளியிலும் மக்கள் திரளும் இடங்களிலும் அரங்கேற்றுவதை நாங்கள் அறிகிறோம்.

தெய்வாராதனே அல்லது தெய்வ வழிபாடு என்பது, இப்படங்களில் காட்சிப்படுத்துவது போல ஆன்மீக பழக்கவழக்கத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் விஷயமாகும். மிமிக்ரி அல்லது ஒப்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்டது அல்ல.

இந்தநிலையில், இப்படிப்பட்ட ஒப்பனைகளில் சிலர் ஈடுபடுவதால், இதுபோன்ற செயல்கள் நமது நம்பிக்கையை சீர்குலைக்கிறது. மேலும், இந்தச் செயல்கள் மத உணர்வுகளையும் துளு சமூகத்தின் நம்பிக்கையையும் ஆழமாக காயப்படுத்துவதாக அமைகிறது.

இதனையடுத்து, ஹோம்பேள் ஃபிலிம்ஸ் நிறுவனம், பொது மக்களிடமும் பார்வையாளர்களிடமும் ஆணித்தரமாக கோரிக்கையை முன்வைக்கிறது. அதன்படி, மேற்குறிப்பட்டுள்ளபடி எந்தவொரு ஒப்பனையும் சித்திரிப்பும் மிமிக்ரி போன்ற செயல்களிலும் திரையரங்கங்களிலும் பொது இடங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தைவாராதனேவின் புனிதத்துவம் எப்போதுமே உயர்த்திப்பிடிக்கப்பட்டாக வேண்டும்.

ஆகவே, இந்தக் கதபாத்திரங்களின் ஆன்மீக முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை அங்கீகரித்து பொறுப்புடன் செயல்படுமறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக்கொள்கிறோம். நாம் மேற்கொள்ளும் வழிபாடானது எவ்விதத்திலும் இலகுவாகவும் சகித்துக்கொள்ள இயலாத விதத்திலும் எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பதையும் நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!