பௌத்த துறவிகளை அவமதிக்கும் வகையில் செயல்படாதீர்: NPP அரசுக்கு எச்சரிக்கை!
பௌத்த துறவிகளை அவமதிக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் செயல்படக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கமென்பது இந்நாட்டின் உரிமையாளர் அல்லர். இந்நாட்டை நிர்வாகிப்பதற்குரிய பொறுப்பு மாத்திரமே அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்நாட்டுக்குரிய அடையாளம் மற்றும் சாசனத்தை அழிப்பதற்கு இடைக்கால நிர்வாகிகளுக்கு இவ்வித உரிமையும் கிடையாது.
எனவே, புத்த சாசனம் மற்றும் பௌத்த துறவிகளுக்கு அநீதி இழைக்கும் வகையில் இந்த அரசாங்கம் செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்பட்டால் பௌத்தர்களாக நாம் எழுந்து நிற்போம்.
இந்த அரசாங்கத்துக்கு வாக்களித்த சிங்கள, பௌத்த மக்கள் கவலையில் உள்ளனர்.” – என்றார் சரத் வீரசேகர.





