குஷ்புவை தரக்குறைவாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது
குஷ்புவை தரக்குறைவாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
குஷ்பு குறித்த சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என்று குஷ்பு கூறிய நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சென்னையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பற்றியும், நடிகையும், மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பற்றியும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் ஆபாசமாகப் பேசினார்.
மேலும், பெண்களையும் அவதூறாகப் பேசியிருந்தார். இதற்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும், நடிகையும், பா.ஜ.க.வைச் சேர்ந்தவரும், மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு ஆகியோர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.
இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த குற்றவாளியின் கேவலமான கருத்துக்கள் தி.மு.க.வில் நிலவும் அரசியல் கலாசாரத்தை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. அந்தக் கூடாரத்தில் இவரைப் போல இன்னும் பலரும் இருக்கிறார்கள். பெண்களை துஷ்பிரயோகம் செய்தல், மோசமான மலிவான கருத்துகளை பேசுவது இவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வெகுமதியாகக் கூட இருக்கலாம்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களே, உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களைப் பற்றி இவ்வாறு பேசினால் நீங்கள் ஏற்பீர்களா? அவர் என்னை மட்டுமல்ல, உங்களையும், உங்கள் தந்தையைப் போன்ற சிறந்த தலைவரையும் அவமதிக்கிறார் என்பதை நீங்கள் உணரவில்லை.
அவருக்கு நீங்கள் எவ்வளவு இடம் கொடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் அரசியல் வாய்ப்பை இழக்க நேரிடும். உங்கள் கட்சி அயோக்கியத்தனமான குண்டர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறி வருகிறது. இது ஒரு அவமானம்” என்று கூறியிருக்கிறார்.
அதேபோல, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழகத்தில் தி.மு.க.வினரின் பொதுவான பேச்சு நிலை இதுதான். உங்கள் கட்சிக்காரர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறதா? உங்களின் பிரபலமான பிரசாரமும், உங்கள் செயல்களும் ஒரே மாதிரியாக இல்லை.
தமிழக ஆளுநர் மற்றும் பா.ஜ.க. தலைவர் குஷ்பு சுந்தர் ஆகியோரை அவதூறாகப் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதேபோல, மீண்டும் மீண்டும் குற்றம் செய்பவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.