கலிபோர்னியா மாநிலத்தில் தீபாவளி பண்டிகை அரசு விடுமுறையாக அறிவிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் தீபாவளி பண்டிகையை, அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.
இதன்மூலம் தீபாவளியை உத்தியோகபூர்வமாக விடுமுறையாக அறிவித்த மூன்றாவது அமெரிக்க மாநிலமாக கலிபோர்னியா மாறியுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் AB 268 என்ற சட்டமூலம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது, ஆளுநர் கவின் நியூசம் கையெழுத்திட்டு சட்டமாக அறிவித்துள்ளார்.
புதிய சட்டத்தின் அடிப்படையில், தீபாவளி நாளில் அரசாங்க ஊழியர்கள், பாடசாலைகள் மற்றும் சமூகக் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
தற்போது கலிபோர்னியாவின் அரசு விடுமுறை நாட்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சட்டம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள், இலங்கையர்கள் உட்பட தீபாவளியை கொண்டாடும் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக மாறியுள்ளது.
பென்சில்வேனியா, கனெக்டிகட் மற்றும் கலிபோர்னியா ஆகியவை தீபாவளியை அதிகாரப்பூர்வமாக விடுமுறை நாளாக அங்கீகரித்துள்ள அமெரிக்க மாநிலங்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.