இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலை அமைக்க ஏற்பாடு!
இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலையொன்றை National Film School ஆரம்பிப்பது குறித்த ஆரம்பகட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தலைமையில் agath Manuwarna நடைபெற்ற கூட்டத்திலேயே இது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், வெகுசன ஊடக பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்னவும் Dr. Kaushalya Ariyaratne கலந்துகொண்டார்.
அத்துடன் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச திரைப்படத் துணைக் குழு மற்றும் இலங்கை மன்றக் கல்லூரி என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
மேலும் திரைப்படத் துறைசார்ந்த நிபுணர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
தேசிய திரைப்படப் பாடசாலையை நிறுவுவது தொடர்பான ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் இங்கு கலந்துகொண்ட அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் முன்வைத்தனர்.
இந்தப் பாடசாலையானது திரைப்படம் குறித்த அறிவை வழங்குவது மட்டுமன்றி, நடைமுறை ரீதியாக திரைப்படங்களை தயாரிக்கும் கலைஞர்களை உருவாக்கும் பாடநெறிகளைக் கொண்ட நிறுவனமாக அமைய வேண்டும் என்று இங்கு வலியுறுத்தப்பட்டது.
சர்வதேச திரைப்படப் பாடசாலைகளின் தரத்திற்கு ஏற்ப இதனைப் பேண வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.
“ திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக இத்தகைய பாடசாலையை நிறுவுவது குறித்து நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்தாலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனவே,சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்களிப்புடன் தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி இதனை ஆரம்பிக்கவும், பின்னர் படிப்படியாக அதனை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.” என ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்தார்.
அதற்கமைய, வெகுசன ஊடக அமைச்சின் கீழ் உள்ள இலங்கை மன்றக் கல்லூரி மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் ஏற்கனவே உள்ள வளங்களைப் பயன்படுத்தி தேசிய திரைப்படப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
இதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பைத் தயாரித்தல் மற்றும் ஆரம்பகட்ட அனுமதிகளைப் பெறுதல் போன்ற அடிப்படைப் பணிகளை முன்னெடுப்பதற்காக இதன்போது குழுவொன்றும் அமைக்கப்பட்டது.





