அண்டார்டிக்காவில் ஏற்படும் பேராபத்து – முழு உலகமும் நீரில் மூழ்கும் அபாயம்
அண்டார்டிக்காவில் அடுத்த 10 ஆண்டுகளில் பாரிய பனித் தகடுகள் திடீரென்று உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான புதிய தகவல்களின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நேச்சர் ஆய்விதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக அண்டார்டிக் பனி மற்றும் கடல் உயிரினங்களின் வாழ்விடங்களில் மிக விரைவான மாற்றங்கள் ஏற்படும் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி மேற்கு அண்டார்டிக் பனித் தகடு ஆபத்தான கட்டத்தில் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் முழுமையான பனித் தகடு சரிந்தால், உலகெங்கிலும் உள்ள கடற்கரையோர நகரங்களை மூழ்கடிக்கும் வகையில், கடல் மட்டம் 3 மீட்டருக்கும் அதிகமாக உயரக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அண்டார்டிக் கடல் பனியின் இழப்பு அளவுக்கு அதிகமாக உள்ளது. கடல் பனி நீங்கும் போது வெளிப்படும் கடல், சூரிய ஒளியில் இருந்து அதிக வெப்பத்தை உறிஞ்சி, அப்பகுதியில் வெப்பமயமாதலை பலமடங்கு அதிகரிக்கிறது.
கடல் நீரோட்டங்கள் பலவீனமடைந்து, பனிப் பாளங்களைத் தாங்கிப் பிடிக்கும் மிதக்கும் பனி அடுக்குகளை அரிக்கப்படுவதால், பனித் தகடுகள் மிகவும் பாதுகாப்பற்றவையாக மாறுகின்றன.
அதேவேளை, கடல் பனி முன்கூட்டியே உருகுவதால் அந்தப் பகுதிகளில் வாழும் பென்குயின் உட்பட பல உயிரினங்கள் அழிவடைந்து வருகின்றன.
இந்த பேராபத்தான நிலையில் இருந்து தப்பித்துக் கொள்ள 1.5 பாகை வெப்பநிலை இலக்கை அடைய உலக நாடுகள் உடனடியாகப் பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.





