ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் ; பா.ரஞ்சித்துக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

நாகை மாவட்டம் விழுந்தமாவடி பகுதியில் பிரபல திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், நீலம் தயாரிப்பில் உருவாகும் வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 13 ம் தேதி நடைபெற்றது.
அப்போது படத்தில் முக்கிய கட்சியான கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டபோது கார் ஒன்று வேகமாக ஓடி மேலே பறந்து கீழே விழும் காட்சி எடுக்கப்பட்டது. அந்த காட்சியில் ஈடுபட்டிருந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் என்பவர் காருடன் மேலே பறந்து கீழே விழும்போது கட்டுப்பாட்டை இழந்து கார் விழுந்ததில் உள்ளே சிக்கி வெளியே வர முடியாமல் உயிரிழந்தார்.
இது தொடர்பாக அலட்சியமாக செயல்பட்டு உயிர் சேதத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கீழையூர் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், சண்டைக்கலைஞர் வினோத், திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் தயாரிப்பு நிர்வாகி ராஜ்கமல், வாகன உரிமையாளர் பிரபாகரன் ஆகிய நான்கு பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று கீழ்வேளூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக இயக்குநர் பா.ரஞ்சித் வருகைதந்தார். நீண்ட நேரம் தனது காரில் காத்திருந்த அவர் சுமார் 12 மணியளவில் நீதிபதி மீனாட்சி முன்னிலையில் ஆஜாரான நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து பா.ரஞ்சித் தனது காரில் புறப்பட்டு சென்றார். இந்த வழக்கில் ஏற்கனவே 3 பேர் கீழையூர் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டண்ட் மாஸ்டர் படப்பிடிப்பில் உயிரிழந்த நிலையில் வேட்டுவம் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். மேலும் அசோக் செல்வனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நாயகியாக சோபிதா துலிபாலா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.