சீன வெளிவிவகார அமைச்சரின் கொழும்பு பயணம் குறித்து டெல்லி கழுகுப்பார்வை!
சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது விஜயம் தொடர்பில் டெல்லி கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.
ஆபிரிக்க நாடுகளுக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி Wang Yi இன்று மாலை அல்லது நாளை இலங்கை வருகின்றார்.
கொழும்பு வரும், சீன வெளிவிவகார அமைச்சர் , இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட தரப்பினருடன் சந்திப்பு நடத்துவார்.
இலங்கையில் சீனத் திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் புதிய சீன முதலீடுகள் தொடர்பில் மேற்படி சந்திப்புகளின்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.
அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதுவராக அண்மையில் இலங்கை வந்தார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மீண்டெழுவதற்குரிய இந்தியாவின் சலுகைக் கடன் மற்றும் நன்கொடை திட்டம் பற்றி அவர் அறிவிப்பு விடுத்தார்.
எனவே, இலங்கை மீண்டெழுவதற்கு சீனாவின் உதவி பற்றியும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பார் என தெரியவருகின்றது.
அதேவேளை, சீன அமைச்சரின் கொழும்பு வருகை தொடர்பில் டெல்லி கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளது.
பூகோள அரசியலில் முக்கிய அமைவிடமாக உள்ள இலங்கையில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முக்கிய திட்டங்களை முன்னெடுத்துவருகின்றன.





