ஆஸ்திரேலியாவில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கை :கடும் நிதி நெருக்கடியில் பல்கலைக்கழகங்கள்

அதிகரித்து வரும் ஊதிய உயர்வினாலும், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையினாலும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன.
நிதிச் சுமை கூடியுள்ளதால் பல்கலை ஊழியர்களுக்குச் சம்பளம் தர இயலவில்லை என்றும் இதனால் கல்வி, நிபுணத்துவம் சார்ந்த ஏறத்தாழ 3,500க்கும் அதிகமான ஊழியர்கள் எண்ணிக்கையைப் பல்கலைக்கழகங்கள் குறைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது மானுடவியல் பாடத்திட்டத் துறை என்றும் அறியப்படுகிறது. இந்தப் பிரிவில் பயில அனைத்துலக அளவிலான மாணவர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டாத நிலையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா கட்டணம், கல்விக் கட்டணம் உள்ளிட்டவைகள் அனைத்துலக மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்தால் இந்தச் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஆஸ்திரேலியாவின் கல்வித் தரம் எதிர்வரும் காலங்களில் பாதிக்கப்படுமா என்றும் அக்கறை தெரிவித்துள்ளனர் உள்ளூர்வாசிகள்.
முன்னதாக ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் 2026 ஆம் ஆண்டுக்குள் $208.6 மில்லியனை மிச்சப்படுத்தும் இலக்கில் 200க்கும் மேற்பட்ட பணியிடங்களைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
‘வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம்” 400 பணியிடங்களை அகற்றவுள்ளதாகச் சொல்லியுள்ளது.