நிவ்யோர்கில் அவசர நிலை பிரகடனம்!
நியூயோர்க் நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நிலவும் சீற்ற காலநிலை காரணமாகவே மேற்படி அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நகரின் பல சுரங்கப்பாதை அமைப்புகள், தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, அதே நேரத்தில் லாகார்டியா விமான நிலையத்தில் குறைந்தபட்சம் ஒரு முனையமாவது நேற்று (29.09) மூடப்பட்டது.
நகரின் சில பகுதிகளில் 8in (20cm) வரை மழை பெய்துள்ளதுடன், இந்த வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சூழ்நிலையிலேயே அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. “நியூயார்க் நகரம், லாங் ஐலேண்ட் மற்றும் ஹட்சன் பள்ளத்தாக்கு முழுவதும் நாங்கள் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்வதாக ஆளுனர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் “வெள்ளம் நிறைந்த சாலைகளில் பயணிக்க முயற்சிக்க வேண்டாம்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
உயிரிழப்பு அல்லது ஆபத்தான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.