ஹசீனாவுக்கு மரண தண்டனை : நாடு கடத்துமா இந்தியா?, ஜனநாயகமும் நீதியும் சந்திக்கும் சிக்கல்!
பங்களாதேஷ் அரசியலில் பல ஆண்டுகளாகக் கொதித்துக் கொண்டிருந்த குழப்பம், புதிய தீர்ப்பால் மீண்டும் பல குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு டாக்கா தெருக்களில் அரசியல் வெப்பம் ஆபத்தான நிலையை எட்டியது.
ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இரண்டு தரப்பும் வீதிகளில் களமிறங்க, பங்களாதேஷ் மீண்டும் ஒருமுறை தீப்பற்றிய அரசியல் நிலைக்கு மாறியது.
இந்த தீர்ப்பு ஒரு சாதாரண நீதிமன்ற உத்தரவு அல்ல, அது பங்களாதேஷ் அரசியலின் எதிர்காலத்தையே வடிவமைக்கும் வரலாற்றுப் புள்ளியாக மாறியுள்ளது.
ஹசீனாவுக்கு எதிரான தீர்ப்பு நியாயமா, அல்லது அரசியல் பழிச் சுமத்தலா என்ற விவாதம் உலக அரங்கில் தீவிரமாகியுள்ளது..
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஹசீனாவை நாடு கடத்துமாறு பங்களாதேஷ் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், அந்த கோரிக்கைக்கு இந்தியா எப்படிப் பதிலளிக்கும்?
இதுவே இப்போது தெற்காசிய அரசியலை முழுமையாக ஆட்டிப்படைக்கும் பெரும் கேள்வியாக மாறியிருக்கிறது.
பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.
ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி என கண்டறிந்ததைத் தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிப்பதாக பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (Bangladesh International Crimes Tribunal) கடந்த 17 ஆம் திகதி தீர்ப்பளித்தது.
இந்நிலையில் டாக்கா நீதிமன்ற உத்தரவுக்கு பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார், அந்த உத்தரவு “ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக உந்தப்பட்டது” என்றும் அவர் குற்றம் சுமத்துகிறார்.
அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டமும் வெடித்தது. தலைநகர் டாக்காவில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஷேக் ஹசீனாவை பங்களாதேஷிற்கு நாடு கடத்துமாறு இந்தியாவிடம் பங்களாதேஷ் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வருடம் மாணவர்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக மேற்கொண்ட போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதனை தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான 84 வயதான முகமது யூனுஸ், தலைமையில் பங்களாதேஷின் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
அபார வெற்றி பெற்று ஆட்சிபீடமேறிய ஷேக் ஹசீனா
பங்களாதேஷின் தந்தை என்று போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளான ஷேக் ஹசீனா ஆரம்பத்தில் ஜனநாயகத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டவர்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ஆம் திகதி பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றது.
அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் அவாமி லீக் கட்சி 222 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷின் தேசியவாத கட்சி, அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலை முழுமையாக புறக்கணித்தன.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி, 2009 ஆண்டு ஆட்சிப்பீடத்தில் ஏறிய பிறகு, தொடர்ந்து நான்காவது முறையாகவும் தனது பாதையில் முன்னோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஷேக் ஷசீனா, மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் இருந்து வெளியே கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை மையமாகக் கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள், இஸ்லாமிய நாட்டில் சாத்தியமாகியிருந்தது.
பங்களாதேஷின் பொருளாதாரத்தின் முன்னேற்றம் என்பது, அதன் அண்டை நாடுகளும், ஆசிய ஜாம்பவான்களான இந்தியா மற்றும் சீனாவுடன் பொருளாதாரத்தின் பலன்களை அறுவடை செய்யும் ஹசீனாவின் திறமைக்கு சான்றாக பொருளாதார நிபுணர்கள் பார்த்தனர்.
ஆனாலும் நாட்டின் பல கட்சி ஜனநாயகத்தை ஒரே கட்சியாக மாற்ற முயற்சிப்பதாக ஹசீனாவின் நிர்வாகம் மீது பரவலான குற்றச்சாட்டுகள்
எழுந்து வந்தன.
ஜூலை மாதம் வெடித்த போராட்டம்
பங்களாதேஷில் இந்தியாவைப் போன்றே இட ஒதுக்கீடு முறை காணப்படுகிறது. குறிப்பாக பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் 30 சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இது தவிர சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு 10 சதவீதமும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் என மொத்த இடஒதுக்கீடு 56 வீதத்தை கடந்திருக்கிறது.
பங்களாதேஷைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் அரச துறையில் 3,000 பணி வெற்றிடங்கள் உருவாகின்றன. இதற்கு 4,00,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். இந்நிலையில் வேலை வாய்ப்புக்கு அதிக போட்டி ஏற்பட்டு வருகிறது.
இந்த போட்டிக்கு மத்தியில் 56 வீதம் பணியிடங்கள் இடஒதுக்கீடு மூலமாக நிரப்பப்படுவதால் அந்நாட்டு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
முக்கிய துறைகளில் திறமையானவர்கள் பதவி வகிப்பதில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டதுடன் தொடர் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டும்போது அந்நாட்டு அரசு இடஒதுக்கீட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இவ்வாறு கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்த இடஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு இரத்து செய்திருந்தது.
இதற்கு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதேவேளை, இடஒதுக்கீடு இரத்து செய்யப்பட்டமைக்கு ஏனைய பல மாணவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இவ்வாறிருக்கையில் அரசாங்கம் இடஒதுக்கீட்டை இரத்து செய்தமை செல்லாது என அந்நாட்டு உயர்நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையேயான போராட்டம் தீவிரமடைந்தது.
போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து சுமார் 1,400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 25,000 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இவர்களுள் பலர் பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியும் உயிரிழந்தனர்.
ஹசீனாவின் ஆட்சி கவிழ்வு
பங்களாதேஷில் வெடித்த இந்த வன்முறையால் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவிற்கு தப்பிச்சென்றார்.
அந்நாட்டு மாணவர்கள் தொடங்கிய போராட்டம் அந்நாட்டின் அரசியலையே புரட்டிப்போட்டது.
இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ஹசீனா, பிரித்தானியாவில் தஞ்சம் கோரியதாக கூறப்பட்டது. எனினும் பிரித்தானியா அவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கவில்லை.
இதன்பின்னர்,அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ், இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குகிறார்.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
“பங்களாதேஷ் நீதிமன்றம் வழங்கியுள்ள தெளிவான தீர்ப்பு நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் எதிரொலிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
“குற்றச்சாட்டு மற்றும் தண்டனை ஒரு அடிப்படைக் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.. யாரும், எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இந்த முடிவு ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2024 எழுச்சியின் போது பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கும், தங்கள் இழப்புகளால் இன்னும் போராடி வரும் குடும்பங்களுக்கும் நீதியை வழங்குகிறது.” என்றும் யூனுஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்படுவாரா ஹசீனா
இந்நிலையில் தற்போது இந்தியாவில் வசித்து வரும் ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோரை நாடு கடத்துமாறு பங்களாதேஷ் கோரியுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குறித்து அந்நாட்டின் “சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்” வழங்கிய தீர்ப்பை நாங்கள் கவனித்தோம்.
நெருங்கிய அண்டை நாடாக, இந்தியா அமைதி, ஜனநாயகம், நிலைத்தன்மை உள்ளிட்ட பங்களாதேஷ் மக்களின் நலன்களுக்கு உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, இந்தியா எப்போதும் அனைத்து தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அதே சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில்தான் பங்களாதேஷ் இடைக்கால அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.
சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்’, இந்த விசாரணை “நியாயமானதும் அல்ல, நெறியானதும் அல்ல” என்று கூறியுள்ளது.
இந்த வழக்கு அரசியல் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாகக் கூறி, இந்தியா ஷேக் ஹசீனாவை ஒப்படைப்பதற்கு மறுப்பு தெரிவிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“இந்த வழக்கு அரசியல் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக இருந்தால், ஷேக் ஹசீனாவை ஒப்படைப்பதில்லை என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது” சர்வதேச விவகார நிபுணர் டாக்டர் சஞ்சய் பாரத்வாஜ், தெரிவித்துள்ளார்”
இதனிடையே, இந்தியா தனது புவியியல், அரசியல் நலன்கள், பிராந்திய நிலைத்தன்மை மற்றும் மனித உரிமைச் சிக்கல்களை ஒருங்கிணைத்து எடுக்கும் முடிவு, இரண்டு நாடுகளின் உறவுகளின் திசையையும் நிர்ணயிக்கப் போகிறது.
பங்களாதேஷ் தற்போது சட்டத்தின் மேன்மை, ஜனநாயகத்தின் நம்பிக்கை, மற்றும் அரசியல் பழிவாங்கலின் அச்சம், இந்த மூன்றின் சந்திப்புப் பகுதியில் நிற்கிறது.
ஹசீனாவின் எதிர்காலம் எந்த திசையில் நகரும் என்பதை உலகம் முழுவதும் அரசியல் பார்வையாளர்கள் ஏக்கத்துடன் கவனித்து வருகின்றனர்.





