இஸ்ரேலில் இருந்து டுபாயிக்கு கொண்டுவரப்படும் இலங்கை பெண்ணின் சடலம்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் தொடர்ச்சியான மோதல்கள் நிலவி வருகின்ற போதிலும், இலங்கையர்கள் இஸ்ரேலில் வேலைக்காக செல்வதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் இஸ்ரேலிய வேலைகளுக்கு விசா பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், 19 இலங்கையர்களைக் கொண்ட குழுவொன்று இஸ்ரேலுக்கு பணி நிமித்தம் செல்லவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பாவிடம் வினவியபோது,
அதற்கான வாய்ப்புகள் குறித்து மேலும் ஆராயப்பட்டு வருகிறது என்றார்.
இதேவேளை, ஹமாஸ் போராளிகளின் இஸ்ரேல் மீதான தாக்குதலில் உயிரிழந்த இலங்கைப் பெண் அனுலா ஜயதிலக்கவின் சடலம் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சடலம் இன்று இஸ்ரேலில் இருந்து டுபாய்க்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார். டுபாயில் இருந்து கட்டுநாயக்கவிற்கு விமானம் மூலம் சடலம் நாளை இந்த நாட்டுக்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் தொடர்ந்தும் மோதல்கள் நிலவி வருகின்ற போதிலும் பலஸ்தீனத்தின் காஸா பகுதியிலும் இஸ்ரேலின் மேற்குக் கரையிலும் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.