உலகிற்கு காத்திருக்கும் ஆபத்து – நிபுணர்கள் எச்சரிக்கை
கடும் வெப்பத்தால் 2050ஆம் ஆண்டுக்குள் உலகெங்கும் இப்போதுடன் ஒப்பிடுகையில் சுமார் 5 மடங்கு அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதென அனைத்துலக நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உலக மக்களின் சுகாதாரம் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று குழு குறிப்பிட்டது.
சுற்றுப்புறத்துக்கு மாசு ஏற்படுத்தும் எரிபொருள்கள் தொடர்ந்து அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
மக்களின் சுகாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல அம்சங்களில் அவற்றால் உண்டாகும் கடும் வெப்பமும் ஒன்று எனக் குழு தெரிவித்தது.
The Lancet Countdown எனும் ஆய்வு அமைப்பின் வருடாந்திர மதிப்பீட்டு அறிக்கையில் அது தெரியவந்தது. முன்னணி ஆய்வாளர்களும் கல்வி நிலையங்களைச் சேர்ந்தோரும் மதிப்பீட்டில் பங்கெடுத்தனர்.
அதிக வறட்சி காரணமாக மில்லியன் கணக்கானோர் பசிபட்டினியால் வாட நேரிடலாம்; கட்டுக்கடங்காத கொசுப் பரவல், தொற்று நோய்களை அதிகரிக்கக்கூடும்; அவற்றால் சுகாதாரக் கட்டமைப்பு கடும் நெருக்குதலுக்கு உள்ளாகும் என்று அறிக்கை சுட்டியது.
இந்த ஆண்டு மானுட வரலாற்றில் ஆக வெப்பமான ஆண்டாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் அறிக்கை வெளிவந்துள்ளது.