தீவிரமடையும் றீமால் சூறாவளி! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
இன்று முற்பகல் 11.00 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் தென்கிழக்கு அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள “ரெமல்” என்ற புயல் இன்று அதிகாலை 05.30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது.
இது இலங்கையின் வடகிழக்கில் 19.5°N மற்றும் 89.3°Eக்கு அருகில், காங்கேசன்துறையிலிருந்து 1500 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இது இன்று நள்ளிரவில் வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, பங்களாதேஷ் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க (இந்தியா) கடற்கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்த காலப்பகுதியில் இலங்கையை சுற்றியுள்ள கடற்பரப்புகளிலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும், வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதேவேளை, சபரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவான மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது