பீகாரில் 11 வயது சிறுவனை தாக்கி கொன்ற முதலை..
பீகாரில் 11 வயது சிறுவனை தாக்கி கொன்ற முதலையை கிராம மக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், கோகுல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திர தாஸ். இவர் பைக் ஒன்றை வாங்கினார். இந்த பைக்கிற்கு பூஜை செய்வதற்காக, தன் குடும்பத்தினருடன் கங்கை கரைக்குச் சென்றார்.அப்போது, தர்மேந்திர தாஸின் மனைவியும், மகனும் கங்கை நதியில் மகிழ்ச்சியாக நீராடிக் கெண்டிருந்தனர். அப்போது, தண்ணீருக்குள்ளிருந்து திடீரென வெளியே வந்த ராட்சத முதலை தர்மேந்திராவின் மகனின் காலை பிடித்து தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது.
இதைப் பார்த்த தர்மேந்திர தாஸும், மனைவியும் கத்தி கூச்சலிட்டு அலறினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி ஊர் மக்கள் நதிக்குள் பாய்ந்து சிறுவனை தேடினர். ஆனால், சிறுவன் கிடைக்கவில்லை. இதனையடுத்து, உள்ளூர் கிராம மக்களில் சிலர் படகுகளில் சென்று நதிக்குள் வலைகளை வீசி முதலையை பிடிக்க முயற்சித்தனர். அப்போது, வலையில் முதலையும், சிறுவனும் சிக்கினர். வலையை வெளியில் எடுத்து பார்த்தபோது, சிறுவன் இறந்துக்கிடந்தான். அவனின் உடலில் 3 இடத்தில் பலத்த காயங்கள் இருந்தது.
இதனால், கோபமடைந்த உள்ளூர் கிராம மக்கள் சிலர் சிறுவனை கொன்ற முதலையை அடித்து கொலை செய்தனர். இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் முதலையை கொன்றவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.