பற் சிகிச்சையில் பாதரசம் பயன்படுத்த தடை – உலக நாடுகள் ஒப்புதல்
பற்களில் இடைவெளியை நிரப்ப மேற்கொள்ளப்படும் சிகிச்சையில் பாதரசம் பயன்படுத்தப்படுவதை நிறுத்த உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
உலகம் முழுவதும் உள்ள பல் சிகிச்சைத் துறையில் கொண்டுவரப்படும் பெரியதொரு மாற்றமாக, 2034 ஆம் ஆண்டுக்குள் இதன் பயன்பாடு முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் மனிதர்களின் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதரச மாசிலிருந்து பாதுகாக்க மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மாநாட்டில் இதற்கான உடன்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
பல் சிகிச்சையில் பாதரசம் அடங்கிய உலோகக் கலவை பயன்படுத்தப்படுவதை 2034 ஆம் ஆண்டுக்குள் படிப்படியாக நிறுத்துவது என நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக, மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல் மறுசீரமைப்புகளுக்குப் பாதரசக்கலவையைப் பயன்படுத்துவது கைவிடப்பட்டு, கிடைக்கக்கூடிய குறைந்த நச்சுத்தன்மையுள்ள பொருள்களால் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்தில் கவலையை ஏற்படுத்தக்கூடிய 10 வேதிப்பொருள்களில் பாதரசமும் ஒன்று என உலக சுகாதார நிறுவனம் கருதுகிறது.
மனித சுகாதாரத்திற்குப் பாதரசம் கேடு விளைவிக்கக்கூடியது என்று அது குறிப்பிட்டுள்ளது.





