சிங்கப்பூரில் தமிழ் அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு- பிரதமர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

சிங்கப்பூர் தமிழரான போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், அவரை லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கடந்த ஜூலை 12- ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஜூலை 5- ஆம் திகதியன்று லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அமைப்பின் இயக்குநர் என்னை சந்தித்தார்.
அப்போது, அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீதும் மற்றும் வேறு பலர் மீதும் அதிகாரப்பூர்வமாக விசாரணைத் தொடங்குவதற்கு அனுமதிக் கோரினார்.
அதைத் தொடர்ந்து, ஜூலை 6- ஆம் திகதி அன்று சிபிஐபி இயக்குநருக்கு எனது ஒப்புதலை அளித்தேன்.
இதையடுத்து, ஜூலை 11- ஆம் திகதி அன்று முறையான விசாரணை தொடங்கியது. அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தற்போது சிபிஐபி விசாரணையில் உதவி வருகிறார்.
இந்த விசாரணைகள் முடிவடையும் வரை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளேன். அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் விடுப்பில் இருக்கும் போது அவர் வகித்து வந்த போக்குவரத்துத்துறையை மூத்த துணையமைச்சர் சீ ஹோங் டாட் தற்காலிகமாகக் கவனிப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.