ஹாங்காங், சிங்கப்பூரில் மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா

ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஹாங்காங்கில் கொரோனாவின் செயல்பாடு இப்போது மிக அதிகமாக உள்ளதாக நகரின் சுகாதார மைய தொற்று நோய் பிரிவின் தலைவர் ஆல்பர்ட் ஆவ் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் கரோனா பாசிட்டிவ் விகிதம் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல சிங்கப்பூரிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டு மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மே மாதம் முதல் வாரம் கரோனா வைரஸ் பாதிப்பு சுமார் 28% அதிகரித்து 14,200 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரவல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சுமார் 30% அதிகரித்துள்ளது.
அதோடு, சிங்கப்பூரில், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதன் பிரதிபலிப்பாக இந்த அதிகரிப்பு இருக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், குறிப்பாக இணை நோய் உள்ளிட்ட ஆபத்துகள் இருப்போர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
பொதுவாக சுவாசம் தொடர்பான தொற்றுகள் குளிர் காலங்களில்தான் அதிகமாக பரவும். ஆனால், கொரோனா கோடைக் காலத்திலும் அதிகம் பரவுவதாக கூறப்படுகிறது. இப்போது சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவும் நிலையில், கடந்தாண்டு கூட கோடைக் காலத்தில் சீனாவில் வைரஸ் தொற்று ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.