முதல் முறையாக ரஜினியின் கூலி படத்துக்காக டெஸ்லா லைட் ஷோ
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கூலி. முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான் (சிறப்பு தோற்றம்), ஷோபின் ஷாஹீர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர்.
ரூ.400 கோடி பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மாநகரம் படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என்று மாஸ் படங்களை இயக்கியுள்ளார். தற்போது டபுள் மாஸாக இருக்கும் வகையில் கூலி படத்தை இயக்கியுள்ளார். ரஜினியின் படம் என்பதால், இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே வெளிநாடுகளில் கூலி படத்தின் முன்பதிவு படு ஜோராக நடிபெற்று வரும் நிலையில் இதுவரையில் மட்டும் ரூ.14 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்திருக்கிறது. வட அமெரிக்காவில் மட்டும் கூலி ரூ.9.8 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. படம் வெளியாக இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் முன்பதிவு விற்பனையின் வசூல் மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தான் அமெரிக்காவின் டல்லஸ் பகுதியில் கூலி படத்தின் 1 மில்லியன் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதனை கொண்டாடும் விதமாக டெஸ்லா லைட் ஷோ நடைபெற்றது.
இந்த லைட் ஷோவில் டெஸ்லா கார்கள் ஒளி, இசை மற்றும் வீடியோவுடன் தாண்டவம் ஆடியது போன்று காட்சி இடம் பெற்றிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதில் ‘கூலி’ படத்தின் டீசர் மற்றும் ரஜினியின் ஸ்டைல் பிரதிபலிக்கபட்டது
டெஸ்லா லைட் ஷோவானது முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு, தமிழ் சினிமா உலகத்தில் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. டல்லஸில் முதல் முறையாக ரஜினி படத்திற்காக டெஸ்லா ஷோ நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது






