இலங்கை : புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை
அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பரீட்சைதாள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் விரைவில் முடிவெடுக்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது.
வடமத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், உதவி கண்காணிப்பாளர் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் தனியார் வகுப்பு ஆசிரியர்களுடன் சமூக ஊடகக் குழுவொன்றில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தரம் 5 பரீட்சையின் முதல் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் சுமார் 100 பெற்றோர்கள் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என பெற்றோர்கள் போலீசில் அளித்த புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.