சீனாவில் சர்ச்சையை ஏற்படுத்திய சவால்: 3 மாதங்களில் 50 கிலோ எடை குறைப்பவருக்கு சொகுசு கார்
சீனாவில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடம், மூன்று மாதங்களுக்குள் 50 கிலோகிராம் எடையைக் குறைக்கும் நபருக்கு சொகுசு கார் பரிசளிக்கும் சவாலை அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஷான்டாங் மாகாணத்தின் பின்ஜோவில் உள்ள இந்த உடற்பயிற்சிக் கூடம், வெற்றியாளருக்கு ஒரு போர்ஷே பனமேரா (Porsche Panamera) காரைப் பரிசாக வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இந்த விளம்பரம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், குறுகிய காலத்தில் இவ்வளவு தீவிர எடை இழப்பின் ஆபத்துகள் குறித்து சுகாதார நிபுணர்கள் கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒரு நாளைக்கு 0.5 கிலோ எடை இழப்பு என்பது மிக வேகமாக உள்ளது என்றும், இது கொழுப்பை விட தசை இழப்புக்கு வழிவகுக்கும் என்றும் குடலிறக்க அறுவை சிகிச்சை நிபுணர் ஜெங் எச்சரித்துள்ளார்.
வாரத்திற்கு சுமார் 0.5 கிலோ எடையைக் குறைப்பதே பாதுகாப்பான இலக்கு என அவர் பரிந்துரைத்துள்ளார்.
தசை இழப்பால் பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், முடி உதிர்தல் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என ஜெங் எச்சரித்துள்ளார்.
சுமார் 30 பேரை இலக்காகக் கொண்டு இந்த சவால் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை ஏழு முதல் எட்டு பேர் இதற்காகப் பதிவு செய்துள்ளனர்.
எனினும், இந்த அதிவேக எடை இழப்பு சவாலின் குறிப்பிட்ட பயிற்சி முறை மற்றும் உணவுத் திட்டம் பற்றிய விவரங்களை உடற்பயிற்சிக் கூடம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





