கலஹா பிராந்திய வைத்தியசாலையில் தொடரும் சிக்கல்கள் : அசமந்த போக்கில் செயற்படும் அதிகாரிகள்!
கம்பளை – கலஹா பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பெருமளவிலான நோயாளர்கள் பல குறைபாடுகள் காரணமாக அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொறுப்பான அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக அறிவித்த போதிலும் கவனிப்பாறற்று இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பளை, ஹகுரன்கெத்த, பத்தஹேவாஹா ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளின் எல்லையில் அமைந்துள்ள கலஹா பிராந்திய வைத்தியசாலைக்கு அதிகளவான மக்கள் சிகிச்சை பெற வருகின்றனர்.
ஆனால், தற்போது மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால், நோயாளிகள் மிகவும் சிரமப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆபத்தான நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தாலும், நோயாளியை வெளிநோயாளர் பிரிவில் இருந்து அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பிற பிரிவுகளுக்கு தள்ளுவண்டி, சக்கர நாற்காலி மூலம் அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பல் மருத்துவ பிரிவு இருந்தும், மருத்துவர் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் பல ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களும் தோட்ட மக்களும் சிகிச்சை பெற்று வரும் இந்த வைத்தியசாலையை உரிய அதிகாரிகள் சீர்செய்து மீளமைக்குமாறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.