கொட்டாஞ்சேனை மாணவி தொடர்பான விசாரணைகளை சீர்குலைக்கும் சதிகள்?

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரத்தில் நீதியை கிடைக்க விடாமல் செய்யும் நோக்கில் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுனைட்டட் ஹியூமன் ரைட்ஸ் என்ற மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் பிரதீபா வர்ணகுலசூரிய இது தொடர்பில் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் இதனை தெரிவித்த அவர், திட்டமிட்ட வகையில், விசாரணைகளைக் குழப்புவதற்கான சதிகளில் இந்த தரப்பினர் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் கற்பித்த பாடசாலையைச் சேர்ந்த சில ஆசிரியர்கள் குறித்த சிறுமி தொடர்பான குற்றச்சாட்டுக்களைப் பொய் என நிரூபிப்பதற்காக WhatsApp குழுவொன்றை அமைத்து செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாணவியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பினருக்கு உதவி செய்யும் வகையில் அந்த WhatsApp குழுவில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்த பிரதீபா வர்ணகுலசூரிய அதற்கான சில ஆதாரங்களையும் முன்வைத்தார்.
குறித்த மாணவியின் தரப்புக்கு அநீதி ஏற்படும் வகையில் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதனை தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம், உயிரிழந்த மாணவியின் பெற்றோர் முறைப்பாடளிக்க வேண்டும் எனவும், அவர் தேசிய சிறுவர் விவகார அதிகார சபைக்கு வரவேண்டும் என மகளிர் விவகார அமைச்சர் உயரிய சபையில் முன்வைத்த கருத்தைக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் மக்களிடம் சென்று கைகூப்பி வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள் இவ்வாறான விடயங்களுக்காக அவர்களின் வீடுகளைத் தேடிச் செல்லாமல் இருப்பது கவலையளிப்பதாகவும் யுனைட்டட் ஹியூமன் ரைட்ஸ் என்ற மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் பிரதீபா வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொட்டாஞ்சேனை மாணவி விடயத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகளிர் அமைப்பினரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சிறுவர் துஷ்பிரயோக விடயத்தில் நீதியைப் பெற்றுத் தராத மகளிர் விவகார அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக இன்றைய தினம் கையெழுத்து வேட்டையொன்றும் முன்னெடுக்கப்பட்டது.