வட்டமிட்ட ரஷ்ய உளவு விமானங்கள்: இடைமறித்து துரத்தியடித்த ஜப்பான்
ஜப்பான் கடல் பிராந்தியத்தில் அத்துமீறி நுழைந்த இரண்டு ரஷ்ய உளவு விமானங்களை இடைமறித்து இருப்பதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஜி7 நாடுகளின் கூட்டம் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடத்தப்பட்டது, இதில் அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் மற்றும் சீனாவில் உலக அரங்கில் ஏற்பட்டு வரும் மாற்றம் ஆகியவற்றை குறித்து முக்கிய விவாதங்களை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நேரில் கலந்து கொண்டு உக்ரைனுக்கான உலக நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டார்.இந்நிலையில் உச்சி மாநாடு நிறைவு பெற்று சில தினங்களே ஆகி இருக்கும் நிலையில், தகவல்களை திரட்டும் ரஷ்யாவின் இரண்டு உளவு விமானங்கள் பசிபிக் பெருங்கடல் மற்றும் ஜப்பான் கடல் பிராந்தியத்தில் சுற்றித் திரிந்துள்ளன.
இதையடுத்து அந்த இரண்டு ரஷ்ய விமானங்களையும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் போர் விமானங்களை அனுப்பி வியாழக்கிழமை இடைமறித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், ரஷ்யாவின் IL-20 விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலின் ஓகோட்ஸ்க்(Okhotsk) கடல் பகுதியில் வட்டமிட்டதாகவும், மற்றொரு ரஷ்ய விமானம் சாடோ தீவை சுற்றி பறந்து விட்டு ஆசிய துணைக் கண்டத்தை நோக்கி செல்ல முற்பட்ட போது இடைமறிக்கபட்டது என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய தரப்பு எந்தவொரு விளக்கமும் இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.