சீன உயர்மட்ட குழுவும் கொழும்பு வருகை: பின்னணி என்ன?
இருநாள் பயணமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இன்று (23) இலங்கை வந்தடைந்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குழுவின் செயலாளரும், அக்கட்சியின் 20 ஆவது மத்திய குழு உறுப்பினருமான வாங் ஜுன்செங் தலைமையிலான குழுவே கொழும்பு வந்துள்ளது.
அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவர்களுக்குரிய வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதில் இலங்கைக்கான சீனத் தூதுவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் முனையத்தில் அமைச்சருக்கும், சீனத் தூதுக்குழுவின் பிரதானிக்கும் இடையில் குறுகிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது இலங்கை, சீன நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் சீனத்தூதுக்குழு இலங்கை வந்துள்ளதை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் வரவேற்றார்.
டிசம்பர் 25 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கும் இக்குழுவினர், பல இடங்களுக்கும் கண்காணிப்பு பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் சீன உயர்மட்ட குழுவினர் சமநேரத்தில் இலங்கை வந்துள்ளமை இராஜதந்திர வட்டாரத்தில் முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகின்றது.





