அமெரிக்காவுடன் பங்காளியாகவும் நண்பராகவும் இருக்க சீனா விருப்பம்; அதிபர் ஸி
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வெற்றிகரமான பங்காளித்துவ உறவுமுறை, ஒரு தடையாக இல்லாமல் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று உதவக்கூடிய ஒரு வாய்ப்பு என சீன அதிபர் ஸி ஜின்பிங் கூறியுள்ளார்.
அமெரிக்க-சீன உறவுகள் குறித்த தேசியக் குழுவின் 2024 வருடாந்திர விருதுகள் இரவு விருந்தில் கலந்துகொண்டவர்களுக்கு ஸி எழுதிய கடிதத்தில், “அமெரிக்காவுடன் ஒரு பங்காளியாகவும் நண்பராகவும் இருக்க சீனா தயாராக உள்ளது. இது, இரு நாடுகளை மட்டுமல்லாமல் உலகிற்கே நன்மை பயக்கும்,” என்று கூறியதாக சிசிடிவி செய்தி அறிக்கை புதன்கிழமை (அக்டோபர் 16) கூறியது.
உலகில் மிக முக்கியமான இருதரப்பு உறவுகளில் ஒன்றாக சீன-அமெரிக்க உறவு விளங்குவதைச் சுட்டிய ஸி, மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் விதியையும் பாதிக்கக்கூடிய வல்லமை அதற்கு இருப்பதாக கடிதத்தில் கூறினார்.
“பரஸ்பர மரியாதை, அமைதியாகச் சேர்ந்து செயல்படுவது இருதரப்புக்கும் வெற்றி தரும் ஒத்துழைப்பு ஆகிய கொள்கைகளுக்கு ஏற்ப சீன-அமெரிக்க உறவுகளை சீனா எப்போதும் கையாண்டுள்ளது.
“மேலும், சீனா மற்றும் அமெரிக்காவின் வெற்றி, ஒன்று மற்றொன்றுக்கு வழங்கும் ஒரு வாய்ப்பு என்பதை சீனா எப்போதும் நம்புகிறது,” என்று ஸி கூறினார்.