ஜப்பான் கடலில் சீனாவும் ரஷ்யாவும் கூட்டு இராணுவப் பயிற்சி

உலக அளவில் அமெரிக்காவின் தலைமையிலான ஆதிக்கத்திற்கு எதிராகச் சீனாவும் ரஷ்யாவும் தங்களது கூட்டாண்மையை வலுப்படுத்தும் நோக்கில், ஆகஸ்ட் 3ஆம் தேதி ஜப்பான் கடலில் கூட்டு கடற்படைப் பயிற்சியைத் தொடங்கின.
பொருளியல், அரசியல் உறவுகளுடன், மாஸ்கோவும் பெய்ஜிங்கும் அண்மைய ஆண்டுகளில் தங்கள் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன. மேலும், பிப்ரவரி 2022ல் உக்ரேன்மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கியதிலிருந்து சீன-ரஷ்ய உறவுகள் வலுவடைந்டைந்துள்ளன.
‘கூட்டு கடல்-2025’ என்ற பெயரிலான இந்தப் பயிற்சி, ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகம் அருகே உள்ள கடற்பகுதியில் தொடங்கியது. இது மூன்று நாள்கள் நடைபெறும் என்று சீனத் தற்காப்பு அமைச்சு ஆகஸ்ட் 3ஆம் தேதி ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு, வான் பாதுகாப்பு, ஏவுகணை எதிர்ப்பு, கடல்சார் போர்த் திறன்கள் ஆகியவை இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஒத்திகை செய்துப் பார்க்கப்படும்.
ரஷ்யக் கப்பல்களுடன் சேர்ந்து ஷாவ்சிங், உரும்சி வழிகாட்டப்பட்ட ஏவுகணைத் தாங்கிகள் உட்பட நான்கு சீனக் கப்பல்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்பதாக சீனத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
இந்தப் பயிற்சிகளுக்குப் பிறகு, பசிபிக் கடல் தொடர்புடைய கடற்பகுதிகளில் கடற்படை சுற்றுக்காவல் பணிகளை இரு நாடுகளும் மேற்கொள்ளும்.
சீனாவும் ரஷ்யாவும் கடந்த பல ஆண்டுகளாக ஆண்டுதோறும் கூட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. ‘கூட்டுக் கடல்’ பயிற்சிகள் 2012ல் தொடங்கப்பட்டன.