குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் : வெளியான விசாரணை அறிக்கை
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாகவும் பின்னர் அறுவை சிகிச்சை மூலம் கை முற்றிலுமாக அகற்றப்பட்டதாக குழந்தையின் தாய் அஜிஷா குற்றம் சாட்டினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்து 3 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று விசாரணைக்குழு விசாரணையை தொடங்கியது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குழந்தையின் தாய் அசிஷாவிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டது.
காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 1 மணி வரை நீடித்தது. வார்டில் என்ன நடந்தது, குழந்தைக்கு எப்போது பிரச்சனைகள் தொடங்கியது என 3 பக்கங்களில் மொத்தம் 21 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அஜிஷா அனைத்து கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
இந்நிலையில், விசாரணைக் குழுவின் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
குழந்தை அனுமதிக்கப்பட்டவுடன் தாமதிக்காமல் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது..
சூடோமோனாஸ் வைரஸால் மூளையில் தொற்று ஏற்பட்டு ரத்தக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டதால், குழந்தையின் வலது கையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில், குழந்தையின் வலது கையை அகற்ற வேண்டியிருந்தது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வார்டில் உள்ள செவிலியரின் அலட்சியமே குழந்தையின் நிலைக்கு காரணம் எனவும் குழந்தையின் தாய் அஜிஷா குற்றம் சாட்டினார்.