சென்னை ;கஞ்சா வழக்கு…சவுக்கு சங்கர் அலுவலகத்தில் தேனி பொலிஸார் சோதனை!
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட போது, அவரது வாகனத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சங்கரின் சென்னை அலுவலகத்தின் பூட்டை உடைத்து தேனி பொலிஸார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் காவலர்கள் குறித்து இழிவாக பேசியிருந்தார். இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்படும் போது, அவரது காரில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேனி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேனி பழனிசெட்டிபட்டி ஸ்டேஷன் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான பொலிஸார் இன்று சென்னையில் உள்ள சவுக்கு சங்கரின் அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை தியாகராய நகர் ராஜா பாதர் தெருவில் உள்ள சவுக்கு மீடியா அலுவலகத்தின் பூட்டை உடைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரை தேனி பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கஞ்சா விற்பனை செய்யும் கும்பலுடன் சவுக்கு சங்கருக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது தொடர்பாக ஆவணங்களை திரட்ட இந்த சோதனை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சவுக்கு சங்கர் வீட்டிலும் சோதனை மேற்கொண்ட பொலிஸார், அங்கெல்லாம் கஞ்சா உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா எனவும் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் தெரிய வரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.