உலகத்திற்கு பெரும் சவாலாகிய ChatGPT – கடும் நெருக்கடியில் ஆசிரியர்கள்

ChatGPTயால் கல்விஅறிவு என்பது மனித மூளைக்குச் சம்பந்தமில்லாத விடயமாக மாறி வருகிறது .
இனிமேல் வகுப்பறையும் ஆசிரியர்களும் தேவையா என்ற திருப்பத்தில் கல்வி உலகம் பெரும் சவாலைச் சந்தித்து நிற்கிறது. எல்லாக் குழப்பங்களுக்கும் தீர்வைத் தேட உதவுகின்ற மனித அறிவையே பெரும் குழப்பத்துக்குள் தள்ளிவிட வந்திருக்கின்றது செயற்கை நுண்ணறிவு.(
இனிமேல் உயர் கல்விப் பரீட்சைகளை மாணவர்கள் கடுமையாக போராடி படித்துத் தாங்களாகவே எழுதப்போகிறார்களா அல்லது எல்லாம் தெரிந்த இயந்திரம் விடை எழுதப்போகின்றதா?
பரீட்சைகளில் – குறிப்பாகப் பல்கலைக்கழக மட்டத் தேர்வுகளில்- மாணவர்கள் ChatGPT என்னும் செயற்கை நுண்ணறிவு இணைய ரோபோக் கருவி மூலம் விடை எழுதி ஏமாற்றுகின்ற போக்கு அதிகரித்து வருகிறது. பிரான்ஸின் உயர் கல்வி நிறுவனப் பரீட்சைகள் பலவற்றில் இவ்வாறு முறைகேடாகப் பரீட்சை எழுதிய சம்பவங்கள் அடிக்கடிக் கண்டுபிடிக்கப்பட்டு மீள் பரீட்சைகள் நடத்தப்படுகின்றன.
ChatGPT இந்தக் கருவிதான் தற்போது ஆசிரியர் உலகைப் பெரிதும் உலுக்கி வருகிறது.
அந்த ஒன்லைன் ரோபோ (online robot) வழங்கும் செயற்கை நுண்ணறிவு மூலம் எந்தவொரு கேள்விக்கும் சில நொடிகளிலேயே பதிலளித்துவிட முடியும்.
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பூர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சுமார் இருபது மாணவர்கள் சமீபத்தில் தொலைக் கல்விப் பரீட்சை (distance exam) எழுதுவதற்கு இதைப் பயன்படுத்திப் பிடிபட்டனர்.
ஜப்பானின் வரலாற்றை மையமாகக் கொண்ட எம்சிகியூ(MCQ) என்னும் பல தேர்வுக் கேள்வித்தாளுக்கு விடையளிக்க அவர்கள் ChatGPTயைப் பயன்படுத்தி ஏமாற்றியது தெரியவந்ததை அடுத்து அந்தப் பாடத்துக்கு மீள்பரீட்சை நடத்தப்பட்டது .
பல்கலைக்கழக மட்டப் பரீட்சைகள் வீடுகளில் இருந்தே தேர்வையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதுவதை அனுமதிப்பதால் பரீட்சார்த்திகள் மிக இலகுவாக இவ்வாறான ஏமாற்று மோசடியில் ஈடுபட்டுப் பரீட்சைகளில் சித்தியடைகிறார்கள்.