அமெரிக்க விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள குழப்பம் – தவிக்கும் பயணிகள்
அமெரிக்க அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள சம்பள முடக்க நிலை காரணமாக, விமான போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெருந்தொகையான பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
சுமார் 10 வெவ்வேறு விமான நிலையங்களில் பதிவான பயணத் தாமதங்கள் சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்தன. இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
விமான நிலையங்களில் மூன்றாவது வாரமாகவும் இந்த நெருக்கடி நிலை தொடர்கிறது.
அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கமே இதற்கு பிரதான காரணம் என மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) வெளிப்படையாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
சுமார் 13,000 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும், கிட்டத்தட்ட 50,000 போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகளும் சம்பளம் எதுவுமின்றி வேலை செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சம்பளம் உரிய முறையில் வழங்கப்படா விட்டால் அடுத்து வரும் வாரங்களில் நிலைமை மேலும் மோசமடையும் என அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைகளுக்கு, ஆளும் குடியரசுக் கட்சியும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் மாறிமாறி ஒன்றையொன்று குறைகூறி வருகின்றன. இதனால் நாட்டு மக்களின் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க முடக்கத்திற்கு விரைவில் தீர்வு வழங்குமாறு தொழிற்சங்கங்களும் விமான நிறுவனங்களும் இணைந்து அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





