யூனின் பதவிநீக்கத்தை ஆதரித்தும் எதிர்த்தும் நடைபெறும் பேரணிகளளால் கொரியப் பல்கலைக்கழகங்களில் குழப்பம்

தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலின் பதவிநீக்கத்தை ஆதரித்தும் எதிர்த்தும் நடைபெறும் பேரணிகள் அந்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் வரை பரவியுள்ளது.
மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ள இந்தப் பிரச்சினை, பல்கலைக்கழக வளாகத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.
கொரியப் பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 21ஆம் திகதி, யூனின் பதவி நீக்கத்தை எதிர்த்தும் ஆதரித்தும் ஒரே நேரத்தில் பேரணிகள் நடைபெற்றன.முன்னதாக, சோல் தேசியப் பல்கலைக்கழகத்திலும் யன்சேய் பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் பேரணி நடத்தினர்.
இம்மூன்று பல்கலைக்கழகங்களும் தென்கொரியாவின் ஆகச் சிறந்த பல்கலைக்கழகங்களாகக் கருதப்படுகின்றன.மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் பின்னர் யூடியூப் பிரபலங்கள், அரசியல் அமைப்புகளைச் சேர்ந்தோர், தீவிர வலதுசாரியினர் எனப் பல்வேறு தரப்பினரும் இணைந்து கொண்டனர்.
ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையே கைகலப்பும் வாய்ச்சண்டையும் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு அவசரகால மருத்துவ உதவி வாகனங்கள் அனுப்பப்பட்டன.
காவல்துறையின் அதிகாரபூர்வமற்ற கணிப்புகளின்படி, அதிபர் யூனின் பதவிநீக்கத்தை ஆதரிக்கும் பேரணியில் 165 பேர் பங்கேற்றனர் என்றும் அவர்களில் ஏறத்தாழ 20 பேர் மட்டுமே மாணவர்கள் என்றும் தெரிகிறது.இவ்வேளையில், பதவிநீக்கத்தை எதிர்க்கும் பேரணிக்கு 340 பேர் திரண்டனர் என்றும் அவர்களில் 20 பேர் மட்டுமே மாணவர்கள் என்றும் கூறப்பட்டது.
தேர்வுகள் நெருங்கும் நிலையில் வளாகத்திற்குள் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் வெளித்தரப்பினரைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்படி மாணவர்கள் கோருகின்றனர்.
பதற்றம் அதிகரிப்பதால், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் வளாகப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் இடையில் சமநிலையைப் பேணுவதில் பல்கலைக்கழகங்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றன.