பெண்கள் அதிகாரத்தில் முன்னிலை பெற, நிறுவன கட்டமைப்புகளில் மாற்றங்கள் தேவை – ஹரிணி
பெண்கள் நம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்க வேண்டுமானால், நிறுவன ரீதியான கட்டமைப்புகளிலும் அதிகாரப் பகிர்விலும் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டத்திற்கு இணையாக, உலகப் பெண்கள் மாளிகையில் நடைபெற்ற “உலகப் பெண்கள் டாவோஸ் நிகழ்ச்சி நிரல் 2026” மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“மாறிவரும் உலகை வழிநடத்தும் பெண்கள்” எனும் தலைப்பில் அவர் தனது விசேட உரையை ஆற்றியிருந்தார்.
தீர்மானம் எடுக்கும் செயல்முறைகளில் இருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலான ஒன்றல்ல எனச்
சுட்டிக்காட்டிய பிரதமர், இது சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலையின் விளைவு எனத் தெரிவித்தார்.
இம்மாநாட்டின் இடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசரக்கால மற்றும் இடர் முகாமைத்துவத்திற்கான ஆணையர் ஹட்ஜா லாபிப் ஐ (Hadja Lahbib) பிரதமர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது, ‘டிட்வா’ புயல் அனர்த்தத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகளுக்கு அவர் நன்றியினைத் தெரிவித்தார்.
இலங்கையை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் தயார்படுத்தவும், நாட்டை மீளக்கட்டியெழுப்பவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை அவர் இதன்போது கோரினார்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூவைச் சந்தித்த பிரதமர், அவசர உதவிகளை வழங்கியமைக்காக நன்றியினைத் தெரிவித்தார்.
அத்துடன், ஏ.பி.மொல்லர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரொபர்ட் எம். அக்லாவைச் சந்தித்து, இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் தனியார் துறையினரின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடினார்.





