போர் நிறுத்த பேச்சு வார்த்தை : ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு பயணம்
பாலஸ்தீனம் மீதான போரை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போர் நிறுத்தம் குறித்த வலியுறுத்தல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த சூழலில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இன்று இஸ்ரேல் செல்கிறார். இந்த பயணத்தின்போது போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்துவார் என்று சொல்லப்படுகிறது.
போர் தொடங்கி 11 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 39,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
இப்படியாக நிலைமை மோசமடைந்த நிலையில் போர் நிறுத்தம் குறித்து உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க தொடங்கின. எனவே, அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டன. இவை அனைத்தும் இஸ்ரேல் ஆதரவு நாடுகள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. பணய கைதிகளை விடுவித்தல், தாக்குதலை கைவிடுதல் என இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் ஏற்க முன்வந்தது.
அதாவது ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் படுகொலை செய்த்து. இந்த தாக்குதலை தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கு பதிலடி கொடுப்போம் எனவும் ஹமாஸ் அறிவித்திருக்கிறது. மட்டுமல்லாது ஹமாஸ் ஆதரவு நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் முன்னெப்பொதும் இல்லாத அளவுக்கு பதற்றம் நிலவி வருகிறது.
எனவே இதனை தணிக்க தற்போது அமெரிக்கா மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு பயணம் மெற்கொள்கிறார்.
இருப்பினும் அமெரிக்கா-கத்தார்-இஸ்ரேல்-எகிப்து பேச்சுவார்த்தையில் ஹமாஸ் அமைப்பு பங்கேற்கவில்லை. இஸ்ரேல் புதிய நிபந்தனைகளை விதிப்பதாகவும், இது போர் நிறுத்தத்திற்கு உதவாது என்று ஹமாஸ் பேச்சுவார்த்தையை புறக்கணித்திருக்கிறது. மறுபுறம் ஈரானில் வைத்து ஹனியே கொல்லப்பட்டதால் ஈரான் பழிவாங்க துடித்துக்கொண்டிருக்கிறது.
இதனை தடுக்க மொசாட் உளவுத் தலைவர் டேவிட் பர்னியா, ஷின் பெட் உள்நாட்டு பாதுகாப்பு சேவையின் தலைவர் ரோனென், சிஐஏ இயக்குனர் பில் பர்ன்ஸ், அமெரிக்க மத்திய கிழக்கு தூதர் பிரட் மெக்குர்க், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்தானி மற்றும் எகிப்து உளவுத்துறை தலைவர் அப்பாஸ் கமெல் ஆகியோர் கலந்தாலோசித்துள்ளனர்.