Cathay Pacific விமானங்களில் 43 பயணிகளுக்கு உணவால் ஏற்பட்ட விபரீதம்
Cathay Pacific விமானங்களில் 43 பேர் நோய்வாய்ப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் விமானத்தில் பரிமாறப்பட்ட பீட்ரூட் வகை உணவே அதற்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
இம்மாதம் தொடக்கத்தில் நேப்பாளத்துக்கும் ஹொங்கொங்கிற்கும் இடையிலான இரண்டு விமானப் பயணங்களில் உணவு நச்சுச் சம்பவங்கள் நடந்தன.
விமானத்தில் உணவு உட்கொண்டு 10 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்துக்குள் பயணிகளின் உடல்நலம் குன்றியதாக ஹொங்கொங்கின் சுகாதாரப் பாதுகாப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட இருவரின் மல மாதிரிகளில் Staphylococcus aureus எனும் பாக்டீரியாவைக் கண்டுபிடித்தது.
எனினும் விமானத்தில் வழங்கப்பட்ட உணவின் மாதிரிகளில் மேற்கொண்ட சோதனையில் பாக்டீரியா மிதமிஞ்சிய அளவில் இல்லை என்று நிலையம் உறுதிசெய்தது.
விசாரணையைத் தீவிரமாக்கிய அதிகாரிகள் பின்னர் உணவு தயாரிப்பு ஆலைக்கும் சென்றனர். அங்கு ஊழியர்கள் பெரும்பாலும் கைகளைக் கொண்டு உணவைத் தயாரித்ததை அவர்கள் கவனித்தனர்.
அதுவே உணவை மாசுபடுத்தலாம் என்றும் முடிந்தவரை கருவிகளைப் பயன்படுத்துவது சிறந்தது என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
நேப்பாளத்துக்கும் ஹொங்கொங்கிற்கும் இடையிலான விமானப் பயணங்களில் மட்டுமே பீட்ரூட் வகை உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அதை இனி தயாரிக்கவேண்டாம் என்று சுகாதாரப் பாதுகாப்பு நிலையம் ஆலையிடம் உத்தரவிட்டது.