பெற்றோரின் உரிமைகளைப் பறிக்கும் கல்விச் சீர்திருத்தம்”: கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கடும் எச்சரிக்கை
“பாடசாலைப் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள புதிய சீர்திருத்தங்கள், பெற்றோரின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஹங்வெல்ல புனித சூசையப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், 6 வயது முதல் மாணவர்களுக்குப் போதிக்கப்படவுள்ள இந்த புதிய பாடத்திட்டம், மேற்கத்தைய நாடுகளின் கலாசாரச் சீரழிவுகளைத் திணிப்பதாகக் குற்றம் சாட்டினார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சில சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவிக்காக இலங்கையின் பாரம்பரிய கலாசார விழுமியங்களை அரசாங்கம் அடகு வைக்கக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மனித உரிமைகள் என்ற பெயரில் பிள்ளைகளைப் பெற்றோருக்கு எதிராகத் தூண்டிவிடும் இத்தகைய கல்வி முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்திய பேராயர், அரசாங்கம் தனது அதிகார வரம்பிற்குள் மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் எச்சரித்தார்.”





