சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் வீராங்கனைகள்: ஹமாஸ் வெளியிட்ட வீடியோ!
காஸா எல்லையில் பிணையக்கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் வீராங்கனைகளின் வீடியோவை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இடத்தின் பெயர் குறிப்பிடப்படாத அந்த வீடியோவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீராங்கனைகள் மட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகளும் உள்ளனர்.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதி காஸா.
காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தன்னாட்சி செய்து வருகின்றனர். இந்த அமைப்புக்கு பாலஸ்தீனம் ஆதர்வு. இஸ்ரேல் இந்த அமைப்பை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.
காஸா எல்லையைக் கைப்பற்ற இஸ்ரேல் பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு பாலஸ்தீனமும் பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (அக்.7) இஸ்ரேல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். வான் வழியிலும் தரைமார்க்கமாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதுவரை 900 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீனம் மீது போர் அறிவித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காஸா எல்லையில் தெற்குப் பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீராங்கனைகளை பிணையக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்துள்ள விடியோவை வெளியிட்டுள்ளனர்.
இடத்தின் பெயர் குறிப்பிடப்படாத அந்த விடியோவில் வீராங்கனைகள் மட்டுமின்றி இஸ்ரேல் நாட்டுப் பெண்கள், குழந்தைகள், மூதாட்டிகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். குண்டு மழை பொழிய அதிரும் கட்டட அறையில், அவர்கள் அஞ்சி நடுங்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.