வரிகள் தொடர்பில் டிரம்ப் நிர்வாகக் குழுவைச் சந்திக்கும் கனேடிய வெளியுறவு, நிதி அமைச்சர்கள்
கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் இருவர் அமெரிக்காவின் அடுத்த அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகக் குழுவைச் சந்திக்கவுள்ளனர்.பேரழிவு ஏற்படுத்தக்கூடிய வர்த்தகப் போரைத் தவிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது கனடா.
இந்நிலையில், கனடாவின் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திரு டோமினிக் லபுளோங்க், வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி இருவரும் டிரம்ப்பின் நிர்வாகக் குழுவினரைச் சந்திக்கும் பொருட்டு டிசம்பர் 26ஆம் திகதி ஃபுளோரிடா சென்றுள்ளதாக அமைச்சர் லபுளோங்கின் பேச்சாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஜனவரி மாதம் பதவியேற்ற பிறகு, கனடிய இறக்குமதிகள் அனைத்துக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்போவதாகத் டிரம்ப் சூளுரைத்துள்ளார்.அவ்வாறாயின், பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கனடியப் பிரதமரும் உறுதிகூறினார். ஆனால் அதுகுறித்து மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.
சட்டவிரோதக் குடியேறிகள் விவகாரம், போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றுக்குக் கனடா தீர்வு காணும் வரை அந்த வரிகள் நடப்பிலிருக்கும் என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.டிசம்பர் 27ஆம் திகதி கனடிய அமைச்சர்கள் டிரம்ப்பின் நிர்வாகக் குழுவினரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். இரு விவகாரங்கள் தொடர்பிலும் கனடிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளில் அந்தச் சந்திப்பு கவனம் செலுத்தும் எனக் கூறப்பட்டது.
சந்திப்பில், ஒரு பில்லியன் கனடிய டொலர் (S$944 மில்லியன்) மதிப்பிலான கனடிய அரசாங்கத்தின் புதிய எல்லைப் பாதுகாப்புத் திட்டம் குறித்து அமைச்சர்கள் இருவரும் எடுத்துரைப்பர்.
கனடிய இறக்குமதிகள் மீதான 25 சதவீத வரியால் கனடாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்டக்கூடிய தாக்கம் குறித்தும் அவர்கள் கலந்துரையாடுவர் என்று கூறப்பட்டது. இருப்பினும் டிரம்ப்பின் நிர்வாகக் குழுவில் யாரை அவர்கள் சந்திப்பர் என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை.பிரதமர் ட்ரூடோவின் அரசாங்கத்தின் மீதான நெருக்கடி அதிகரித்துவரும் வேளையில் இந்தச் சந்திப்பு நிகழவிருக்கிறது.
கனடாவின் துணைப் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் பணியாற்றிய திருவாட்டி கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் திடீரென்று பதவி விலகியதை அடுத்துத் திரு லபுளோங் டிசம்பரில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.
பதவி விலகல் கடிதத்தில் ஃப்ரீலேண்ட், டிரம்ப் விதிக்கக்கூடிய வரிகளை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் நிதி நிலையைத் தயார்ப்படுத்தாமல் வாக்காளர்களுக்குக் குறுகியகால வழங்குதொகைகளை அளிப்பதில் ட்ரூடோ கவனம் செலுத்துவதாகச் சாடியிருந்தார்.