அமெரிக்காவின் போர் விமானங்களை வாங்குவதில் தயக்கம் காட்டும் கனடா! பீட் ஹோக்ஸ்ட்ரா எச்சரிக்கை!
கனடா 88 லாக்ஹீட் மார்ட்டின் ( 88 Lockheed Martin) F-35 போர் விமானங்களுக்கான ஆர்டரைக் குறைத்தால், வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை (NORAD) ஒப்பந்தம் மாற்றப்படலாம் என்று அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா (Pete Hoekstra) எச்சரித்துள்ளார்.
கனடாவின் கொள்முதல் குறைக்கப்பட்டால், கனேடிய வான்வெளியில் அமெரிக்க தலையீடு அதிகரிக்கப்படலாம் என்றும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மறு மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கு 19 பில்லியனில் இருந்து 27 பில்லியன் வரை செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. செலவு அதிகரிப்பு காரணமாக கனடா F-35 திட்டத்தை மறுபரிசீலனை செய்து வருகிறது.
மேலும் உள்ளூர் உற்பத்தியை வழங்கும் ஸ்வீடனின் Saab போன்ற மாற்று சப்ளையர்களை ஆராய்ந்து வருகிறது. இந்நிலையிலேயே அமெரிக்காவின் மேற்படி எச்சரிக்கை வந்துள்ளது.
சாப்பின் (Saab கிரிபன் E ஜெட் விமானங்கள் போன்ற ‘தரமற்ற தயாரிப்பை’ தேர்ந்தெடுப்பது பாதுகாப்பு திறன்களை சமரசம் செய்யும் என்றும், அமெரிக்கா கனடாவுடன் அதன் பாதுகாப்பு உத்தியை சரிசெய்ய வேண்டியிருக்கும் என்றும் தூதர் எச்சரித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் கட்டண அச்சுறுத்தல்களால் ஓரளவு தூண்டப்பட்ட அமெரிக்க-கனடா பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் பீட் ஹோக்ஸ்ட்ராவின் (Pete Hoekstra) இந்த எச்சரிக்கை மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.





