பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா

பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என இரு பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசாங்கமும் நிர்வகிக்கின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டுகளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஆனால், இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.
இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரித்தானியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளன.
அதேவேளை, இந்த மூன்று நாடுகளின் அறிவிப்பிற்கு இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் காசாவிற்கு எதிரான தொடர் போரை நிறைவுக்கு கொண்டுவர பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதே ஒரே வழி என பல நாடுகள் தெரிவித்துள்ளது.