சர்க்கரை நோயை தடுக்குமா உடற்பயிற்சி?
நீரிழிவு நோய்க்கு முன் வெளிப்படும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று தாகம் அதிகமாக இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, சிறுநீரகங்கள் அதிகப்படியான குளுக்கோஸை வடிகட்டவும், உறிஞ்சவும் கடினமாக உழைக்கின்றன. இதனால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு அதிக தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
சோர்வு என்பதும் நீரிழிவுக்கு முந்தைய மற்றொரு அறிகுறியாகும், இது எளிதில் கவனிக்கப்படாது. செல்கள் இன்சுலினை எதிர்க்கும் போது, அவை ஆற்றலுக்காக குளுக்கோஸை உறிஞ்சுவதற்கு போராடுகின்றன, இதனால் சோர்வாகவும் மந்தமாகவும் இருப்பார்கள்.
எடையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். குறிப்பாக அடிவயிற்றைச் சுற்றி எடை அதிகரிப்பு இருக்கும். இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இது ஏற்படும். கழுத்து அல்லது அக்குள் போன்ற பகுதிகளில் உள்ள கருமையான திட்டுகள் போன்ற தோல் மாற்றங்கள் ஏற்படுவது நீரிழிவுக்கு முந்தைய அறிகுறி.
உயர் இரத்த சர்க்கரை அளவு கண்களின் லென்ஸைப் பாதிப்பதால் சிலருக்கு மங்கலான பார்வை ஏற்படுகிறது. மனநிலை மாற்றங்கள் மற்றும் அதிகரித்த பசி ஆகியவை முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம். இன்சுலின் எதிர்ப்பு சாதாரண வளர்சிதை மாற்ற செயல்முறைகளை சீர்குலைத்து, ஆற்றல் மற்றும் பசியின் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகிறது.
சில வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்து ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம். டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம்.
முன் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு தேவை. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்க்க வேண்டும். அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் அதிக கலோரி சிற்றுண்டிகளை தவிர்க்கவும்.
நீங்கள் உண்ணும் கார்போஹைட்ரேட்டுகளில் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். சுறுசுறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் கடுமையான உடற்பயிற்சி இரண்டு முதல் மூன்று முறை செய்ய வேண்டும்.
தரமான தூக்கம் குளுக்கோஸ் கட்டுப்பாட்டை திறம்பட குறைக்கும். இரவில் 7 முதல் 9 மணி நேரம் இடையூறு இல்லாமல் தூங்க வேண்டும். மோசமான தூக்க பழக்கம் சில ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைத்து, இன்சுலின் எதிர்ப்பில் மாற்றங்களை உருவாக்கலாம், இது நீரிழிவு நோயை உருவாக்க காரணமாகிறது.
நாள்பட்ட மன அழுத்தம் இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது, இது இன்சுலின் எதிர்ப்பின் முக்கிய காரணியாகும். தியானம், மூச்சுப் பயிற்சி, யோகா செய்யும் பழக்கத்தை வழக்கமாக்குங்கள்.