எல்லை மோதல்களுக்குப் பிறகு தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 வீரர்களை விடுவிக்க தாய்லாந்திடம் கம்போடியா கோரிக்கை

தாய்லாந்து-கம்போடிய எல்லையில் போர் நிறத்தம் நடப்புக்கு வந்த சில மணிநேரத்துக்குப் பிறகு பிடிபட்ட தங்கள் வீரர்களைத் திரும்ப ஒப்படைக்குமாறு கம்போடியா, தாய்லாந்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் அண்மையில் பற்பல ஆண்டுகளாகக் காணப்படாத அளவில் பூசல் மூண்டது. குறைந்தது 43 பேரைப் பலிவாங்கிய சண்டை ஐந்து நாள்கள் நீடித்தது.பிறகு இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதாக இருதரப்பும் ஒன்றை மற்றொன்றைக் குற்றஞ்சாட்டின. பிறகு புதன்கிழமை (ஜூலை 30) காலை ஏழு மணி வரை எந்த வன்முறையும் இடம்பெறவில்லை என்று பேங்காக் சொன்னது.
20 ராணுவ வீரர்களை விடுவிக்கப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கம்போடிய தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் மேலி சொக்கியாட்டா தெரிவித்தார். பின்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் நடப்புக்கு வந்து சுமார் எட்டு மணிநேரத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) காலை 7.50 மணியளவில் சில துருப்புகள் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அனைத்துலக மனிதாபிமான சட்டம், ராணுவ விதிமுறைகள் ஆகியவற்றுக்கு இணங்க பிடித்துவைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் நடத்தப்பட்டுவருவதாக தாய்லாந்து அரசாங்கம் புதன்கிழமை (ஜூலை 30) கூறியது. எல்லைச் சூழல் சீரானவுடன் அவர்கள் திருப்பி ஒப்படைக்கப்படுவர் என்று தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்தது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்துமாறு ஐக்கிய நாட்டு சபையின் உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், தாய்லாந்தையும் கம்போடியாவையும் கேட்டுக்கொண்டுள்ளார். நம்பிக்கையையும் அமைதியையும் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
போர் நிறுத்த ஒப்பந்தம், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தலையீட்டுடன் மலேசியாவில் எட்டப்பட்டது. அமெரிக்க வரிவிதிப்பு தொடர்பில் கம்போடியா, தாய்லாந்து இரண்டும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே பூசல் மூண்டதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 300,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.