உபாதைக்கு பிறகு மீண்டும் பயிற்சியை ஆரம்பித்த பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் முதுகுத் தண்டுவடப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
அதன் பிறகு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. ஆசியக் கோப்பை 2022, டி20 உலகக் கோப்பை போன்ற தொடர்களில் பும்ரா பங்கேற்கவில்லை. 16-வது ஐபிஎல் சீசனில் இருந்தும் அவர் விலகினார்.
பி.சி.சி.ஐ., மருத்துவக்குழுவின் அறிவுரையின் படி காயத்துக்காக கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் நியூஸிலாந்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து மூன்று மாதங்கள் ஓய்வில் இருந்த பும்ரா, சமீபத்தில் 100 சதவீதம் உடற்தகுதியை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் தற்போது பந்துவீச்சு பயிற்சி மேற்கொண்டு வரும் பும்ரா, விரைவில் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளார்.
மேலும் முழு உடல்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் பும்ரா அடுத்த மாதம் நடைபெற உள்ள அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்த்துக்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.