முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வசம் இருந்த குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் இன்று (04.10) அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் வழக்கறிஞர் மனோஜ் கமகே, ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களும் 5 ஆவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமும் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
கூடுதலாக, மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அதிகாரிகள் பயணிக்கும் வாகனமும் மீள கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்த சூழ்நிலை காரணமாக, மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மனோஜ் கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
“அடுத்த வாரம் பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களைச் சந்தித்து மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்குத் தேவையான வாகனங்களைப் பெறுவதற்கான கோரிக்கையை முன்வைப்போம் என்று நம்புகிறோம்,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





