13 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கிம் வருகை தந்த புத்த மதத் தலைவர் தலாய் லாமா
திபெத்திய புத்த மத, ஆன்மீகத் தலைவரான 14வது தலாய் லாமா, சுமார் 13 வருட இடைவெளிக்குப் பிறகு சிக்கிம் மாநிலத்துக்கு இன்று காலை வருகை தந்தார்.
கிழக்கு சிக்கிமில் உள்ள லிபிங் ராணுவ ஹெலிபேடில் இன்று காலை தரையிறங்கிய தலாய் லாமாவை, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் வரவேற்றார். தலாய் லாமாவுக்கு மாநிலத்தின் பல்வேறு மடங்களின் துறவிகள் ‘ஷெர்பாங்’ எனப்படும் பாரம்பரிய நடனம் மற்றும் பிரார்த்தனைகள் உள்ளிட்ட புத்த மத சடங்களை நிகழ்த்தி வரவேற்பு அளித்தனர். மேலும் நாடுகடத்தப்பட்ட திபெத்திய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் குடியேற்ற அலுவலகத்தினர் தலாய் லாமாவை வாழ்த்த வருகை தந்திருந்தனர்.
டென்சின் கியாட்சோ என்னும் தலாய் லாமாவுக்கு தற்போது 87 வயதாகிறது. இன்று சிக்கிமுக்கு வருகை தந்த தலாய் லாமாவை தரிசிக்க தியோராலியிலிருந்து ஜீரோ பாயின்ட் வரையிலான நெடுஞ்சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்தனர். நாளை(டிச.12) நாதுலாவில் அமைந்துள்ள, இந்தியா – சீன எல்லையில் இருந்து 50 கிமீ தொலைவில் இருக்கும் பல்ஜோர் மைதானத்தில் ஆன்மீக நிகழ்வொன்றில் பங்கேற்கிறார். அங்கு ’போதிசத்துவர்களின் முப்பத்தேழு நடைமுறைகள்’ என்பது குறித்த போதனைகளை அவர் வழங்க இருக்கிறார்.
A heartwarming reunion as His Holiness the Dalai Lama embraces a special moment with his elder brother Gyalo Thondup. pic.twitter.com/5K7n25xpDU
— Kalsang Jigme བོད། 📷 (@kalsang_jigme) December 11, 2023
பால்ஜோரில் தலாய் லாமாவிடம் ஆசி பெற, சுமார் 40,000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடைபெற உள்ள மெய்நிகர் நிகழ்வில், காங்டாக் மாவட்டத்தின் உள்ள சிம்மிக் காம்டாங் தொகுதியில் அமையவிருக்கும் கர்மபா பூங்காவுக்கான அடிக்கல்லை தலாய் லாமா நாட்டுவார்.
பின்னர் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள சலுகாராவுக்கு அவர் செல்கிறார். மேலும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் சந்திப்புகளை மேற்கொள்ள, வியாழக்கிழமை காலை வரை காங்டாக்கில் தலாய் லாமா தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக 2010-ம் ஆண்டு சிக்கிமுக்கு தலாய் லாமா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.