ஈராக் போர்- புற்றுநோய் அபாய இரசாயனத்திற்கு உட்படுத்தப்பட்ட UK வீரர்கள்
2003 ஆம் ஆண்டு ஈராக் போரின் போது, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய அபாயங்களுக்கு பிரித்தானிய விமானப்படை
வீரர்கள் உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த ஆண்டு, ஈராகிலுள்ள கர்மத் அலி (Qarmat Ali) நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பாதுகாப்பதற்காக, சுமார் 100 விமானப்படை
வீரர்கள் பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த இடம், புற்றுநோயுடன் தொடர்புடைய மிக ஆபத்தான இரசாயனமான சோடியம் டைக்ரோமேட் மூலம் மாசடைந்திருந்தது என்பதை அவர்கள் அறியவில்லை.
இந்த இரசாயனத்துக்கு நீண்ட காலம் உட்படுவது உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்புகளை, குறிப்பாக புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஈராகில் ஒரு மிக ஆபத்தான நச்சுப் பொருளுக்கு ஆளான பிறகு, உயிரியல் பரிசோதனைகள் வழங்கப்படவில்லை என்று பிரித்தானிய விமானப்படை (RAF) வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் இருந்த போதும், அவர்களை பரிசோதனை செய்யவேண்டும் என சொல்லப்படவில்லை என ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.
2003 ஆம் ஆண்டில், பெரிதும் மாசுபட்ட கர்மத் அலி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்ட RAF வீரர்கள், பின்னர் பல ஆண்டுகளாக புற்றுநோய், கட்டிகள், மூக்கில் இரத்த கசிவுகள் மற்றும் சொறி போன்ற பல்வேறு உடல் பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, வீரர்களின் பாதுகாப்பில் ஏற்பட்ட அலட்சியம் குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.




